பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மும்பை கார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
’பாலிவுட்டின் சோக நாயகன்’ என்று அழைக்கப்படும் திலீப் குமார் ஆறு தசாப்தங்களைக் கடந்து பாலிவுட்டில் நடித்து வந்துள்ளார். தேவதாஸ் (1955), நயா தர் (1957), முகலே ஆசாம் (1960), கங்கா ஜமுனா (1961), கிரந்தி (1981), கர்மா (1986) ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் உள்பட 65க்கும் மேற்பட்ட படங்களில் திலீப் குமார் நடித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக திலீப் குமாருக்கு சுவாசப் பிரச்சினைகள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். 98 வயதைக் கடந்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமார், சமீப காலமாகவே வயது மூப்பு காரணமாக தொடர்ந்து உடல் உபாதைகளை சந்தித்து வருகிறார்.
இறுதியாக 1998ஆம் ஆண்டு ’கிலா’ என்ற படத்தில் திரையில் தோன்றிய திலீப் குமார், 1994ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும், 2015ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்துள்ளது.