ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்த திரைப்படம் ஒன்றைக் கூறும் இயக்குநர் குவென்டின் டொரன்டினோ, இந்த ஆண்டு ‘crawl’ (க்ராவ்ல்) திரைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அலெக்ஸாண்டர் அஜா இயக்கத்தில் கயா ஸ்கோடல்ரியோ, பேரி பெப்பர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘crawl’. கேட்டகிரி 5 சூறாவளியால் உருவான வெள்ளத்தில் ஒரு பெரிய முதலை ஃப்ளோரிடாவுக்குள் வந்துவிடுகிறது. அதன் அட்டூழியத்தில் இருந்து கதாநாயகி குடும்பம் தப்பித்ததா? இல்லையா? என்பதுதான் கதை. மைக்கேல் ராஸ்முஸன், ஷான் ராஸ்முஸன் இணைந்து எழுதிய இக்கதையை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார் அலெக்ஸாண்டர் அஜா. பாக்ஸ்-ஆபிஸில் இத்திரைப்படம் சக்கை போடு போட்டிருக்கிறது.
டொரன்டினோ தற்போது சமீபத்தில் அவர் இயக்கிய ‘Once Upon A Time In Hollywood’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். லியோனர்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.