கரோனா வைரஸ் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களாகவே பாடல் எழுதி, வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் 45 கன்னட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர்.எஸ். கணேஷ் நாராயண், "மானிடா கவனமே கொள்ளடா", "மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு" ஆகிய இரண்டு கரோனா விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இசைக்குழுவினர் கூறுகையில், “மனித உயிர்களை ஊசலாடவிட்ட கிருமி ரூபத்தில் வந்த எமன், நொந்து கிடக்கும் மனித இனத்தை நோயிலிருந்து காத்துக்கொள்ளவே இந்த விழிப்புணர்வு பாடல்.
"மானிடா கவனமே கொள்ளடா" என்ற இந்தப் பாடல் கரோனாவின் அச்சம் தவிர்க்க, மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகளிலும், உணர்ச்சியூட்டும் இசையிலும் உருவாகியுள்ளது.
அதேபோன்று "மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு" என்ற பாடல், மனிதனை பதம் பார்க்க வந்த கரோனாவை, மனிதனே பதம் பார்க்கத் தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர். இந்த இரண்டு பாடல்களையும் தருமபுரி சோமு என்பவர் எழுதியுள்ளார்.