சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர், மலைக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. சரிவான மலைப்பாதை, உயரமான முகடுகள், மலைகளின் நடுவே காடு, முகடுகளை தொட்டபடி செல்லும் பனிமூட்டம் போன்ற இயற்கை எழில் கொண்ட இங்கு, முதன்முறையாக திரைப்படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா இணைந்து நடிக்கும் கள்வன் படத்தை சத்தியமங்கலத்தை சேர்ந்த இயக்குநர் பி.வி.சங்கர் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
அப்போது ஜி.வி.பிரகாஷ் ஒருவரை துரத்திக்கொண்டு ஓடுவதை போல காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்க உள்ளார். அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, இந்த படப்படிப்பில் 60 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். மலைப்பகுதிகள், பவானிசாகர் அணை மற்றும் பெரியகொடிவேரியில் தொடர்ந்து 30 நாள்கள் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
கடம்பூர் கிராமத்தில் முதன்முறையாக படப்பிடிப்பு நடப்பதால், மலைவாழ் மக்கள் படப்பிடிப்பை பார்க்க அதிக ஆர்வத்துடன் அங்கு கூடினர்.
இதையும் படிங்க: சினேகன் கார் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு