காலத்தால் அழியாத நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை தனது முதல் படைப்பின் மூலம் கட்டியெழுப்பியவர் இயக்குநர் சிம்புதேவன்.
மதுரையைச் சேர்ந்த வெங்கட்ராமன்-திரவியம் வெங்கட்ராமன் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் செந்தில்குமார் என்ற சிம்புதேவன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற சிம்புதேவன், திரையுலகின் மீது கொண்ட அளப்பறிய காதலால் கோடம்பாக்கம் நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டார்.
இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய சிம்புதேவன், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி படங்களில் பணியாற்றிய பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தீனா மற்றும் ரமணா ஆகிய படங்களிலும் பணியாற்றினார்.
பெயர் பெற்ற இரு இயக்குநர்களிடம் பணியாற்றிய அறிமுகத்தோடு, பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற தனது முதல் படைப்பை வெள்ளித்திரையில் அரங்கேற்றினார் சிம்புதேவன்.
இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற காலத்தால் அழியாத நகைச்சுவை திரைப்படம் மூலம் விருந்துபடைத்து தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தார். இந்தப்படம் பெரும் வெற்றி பெற்று இவருக்கு திரையுலகில் மகுடம் சூட்டியது.
தனது முதல் படத்தின் மூலம் அரியணையில் அமர்ந்த சிம்புதேவன், தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூனு களவாணிகளும் படங்களை இயக்கி நன்கு அறியப்பட்டார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் உடன் புலி என்ற ஃபேன்டசி திரைப்படத்தை கொடுத்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனிடையே தற்போது புது முயற்சியாக கசட தபற என்ற மல்ட்டி ஸ்டார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் என ஒரு பெரும் பட்டாளமே இணைந்து படைக்கிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி, பிரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோரை ஒரே திரையில் களமிறக்கும் புது முயற்சியாக இந்தப்படம் பார்க்கப்படுகிறது.
திரையுலக பயணத்தில் பல வெற்றி, சறுக்கல்களை சந்தித்து தொடர்ந்து வீரநடை போட்டு தமிழ் சினிமாவுக்கு கலை விருந்து படைத்துவரும் இயக்குநர் சிம்புதேவனுக்கு ஈடிவி பாரத் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!