சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சந்திரமுகி’. பி.வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். திகில் கலந்த த்ரில்லர் பாணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் மலையாளத்தில் 'மணிசித்திரத்தாலு' படத்தின் ரீமேக் ஆகும்.
இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. பி. வாசு இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதுமட்டுமின்றி 'வேட்டையன்' கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
![raghav rawrence](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-chandramuki2-raghavrawrence-script-7204954_01082020192835_0108f_1596290315_21.jpg)
மேலும் சந்திரமுகியாக ஜோதிகாவுக்குப் பதிலாக, சிம்ரன் நடிக்க உள்ளதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'சந்திரமுகி 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே படத்தின் கதாநாயகி குறித்து தயாரிப்பு நிறுவனம் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.