விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் திரைப்படம் 'சக்ரா' . விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், சிருஷ்டி டாங்கே, கே.ஆர். விஜயா, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இது குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் த்ரில்லர், தேசபக்தி என பல அம்சங்களோடு உருவாகும் படம் 'சக்ரா'. இப்படத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இது இருக்கும் என்றார்.
மேலும் அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிருஷ்டம் என்று கூறிய ஆனந்தன் 'சக்ரா' படத்திற்குக் கதை எழுதும்போதே மிலிட்டரி கதாபாத்திரத்திற்கு விஷால்தான் சரியானவர் என தோன்றியதாக கூறினார். வலிமையான கதாபாத்திரத்தை படம் முழுக்க சிதையாமல், பக்குவமாகக் கையாளும் திறமையானவர் விஷால் என்ற அவர், பெண் காவல் துறை அலுவலர் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமான முக அமைப்புக் கொண்ட நடிகை வேண்டும் என்று நினைத்ததாகவும் அதற்கு நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிகப் பொருத்தமாக இருந்தார் எனவும் கூறினார்.
பொதுவாக ஒரு இயக்குநருக்கு கதை எழுதும்போது அப்படியே காட்சி படுத்துதல் என்பது எளிதானதல்ல என குறிபிட்ட ஆனந்தன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியும், தான் எழுதியதை அப்படியே காட்சிப்படுத்திய தருணங்கள் மறக்க முடியாதவை என்று தெரிவித்தார். 'சக்ரா' சென்னையில் நடக்கும் கிரைம் கதை என்பதால் சென்னை, கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடத்தியிருப்பதாக கூறினார். 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துக்கொண்டுள்ளதாகவும் 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
'சக்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான இன்று, 'ஆக்ஷன்' படமும் வெளியானதால் செம குஷியில் இருக்கிறாராம் விஷால்.
இதையும் படிங்க: எஃப்பிஐயிடம் டார்ச்சரை அனுபவிக்கும் ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!