பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எந்திரன்'. இதில் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரனாகவும், சிட்டி எந்திரனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு, படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் என்ற போஸ்டர் வெளியானது. அதில், ரஜினி ரோபோவாக கையில் ஒரு ரோஜாவை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த போஸ்டரைப் பார்த்த பலரும் அது சிஜியில் எடிட் செய்யப்பட்டது என்று கூறினார்கள்.
இந்நிலையில் இது குறித்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "2008ஆம் ஆண்டு நான் எடுத்த போட்டோ ஷுட்தான் அது. மக்கள் இது கிராஃபிக்ஸ் என நினைத்தனர்.
அந்த ஷூட்டிற்காக ரஜினி மிகவும் சிரமப்பட்டார். சில்வர் நிற பெயிண்ட் அடித்துக்கொண்டு, சில்வர் நிற தலைக்கவசம் அணிந்தார். மேலும் இதுவரை வெளியிடப்படாத இரண்டாவது புகைப்படத்தைப் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.