சென்னை: நடனப் பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் “தோழி” பாடல் இன்று (ஜன 27) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதயப்பூர்வமான இசை
இதனைத் தொடர்ந்து இன்று (ஜன 27) இப்பாடல் வெளியானது. இப்பாடல் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது. மதன் கார்க்கியின் வரிகளில், கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது.
தோழி பாடல் குறித்து பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்தப் பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது.
கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்”, என்றார்.
படத்தின் பின்னணிகள்
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
நடன இயக்குனர் பிரிந்தா இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். ராதா ஶ்ரீதர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் எழுத்து மற்றும் பாடல்கள்களை மதன் கார்க்கி அமைக்க, கலை இயக்கத்தை எஸ்.எஸ் மூர்த்தி மற்றும் செந்தில் ராகவன் மேற்கொள்ள, சண்டை பயிற்சியை அஷோக் கையாண்டு வருகிறார்.