கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படம் 'கோமாளி'. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
16 ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் ஜெயம் ரவி, இயல்புநிலைக்கு திரும்பியபின் நவீன உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அத்துடன் தனது பழைய காதலியை தேடிச்செல்லும்போது ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் 'கோமாளி'.
90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் தற்போதைய நவீன உலகில் நாம் தொலைத்த விஷயங்களையும் திரையில் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும் படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிலையில், 'கோமாளி' படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் தயாரித்து தல அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டியது.
இதையடுத்து 'கோமாளி' படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ள போனி கபூர், அதில் தனது மகன் அர்ஜுன் கபூரை ஹீரோவாக நடிக்கவைக்கவுள்ளார். மேலும், படத்தை கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளாராம்.
இது குறித்து போனி கபூர் கூறியதாவது, கோமாளி ரீமேக் உரிமையை எங்களது பேவியூ புரொஜக்ட் நிறுவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய உரிமை வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.