புகழ்பெற்ற 'பிளாக் பாந்தர்' நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புசெய்தி ஹாலிவுட் நடிகர்களையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்வெல் சினிமேட்டிக் யூனிவெர்ஸின் திரைப்படங்களில் முதன்முதலாக கறுப்பின நபரை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர், சாட்விக் போஸ்மேன். இவர் 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' திரைப்படத்தில் பிளாக் பாந்தராக நடித்திருந்தார்.
முன்னதாக இவர் '42', 'கெட் ஆன் அப்', 'மார்ஷெல்' போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பெருங்குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இவர், அதை வெளியுலகத்திற்கு அறிவிக்காமலேயே சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் இருப்பதாக, இவரது ட்விட்டர் பக்கத்தில் வந்த செய்தியைத் தொடர்ந்து அவர் இறந்ததாகவும் செய்தி வெளியானது.
இந்தச் செய்தியைக் கேட்டு ஹாலிவுட் வட்டாரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த புரொடக்ஷன் டிசைன் என மூன்று ஆஸ்கர் விருதுகளை 'பிளாக் பாந்தர்' திரைப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.