பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ்பெற்ற முகின் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ’வேலன்’ எனும் ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார். இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
காதலை காமெடியுடன் கலந்து சொல்லும் இப்படம் அனைவரும் ரசிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாகிறது. இப்படத்தை கலைமகன் முபாரக் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "குடும்பமாக இணைந்து பார்க்கும், அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள். இன்றைய உலகில் குடும்பங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, நேர்மறை அம்சங்களை சொல்ல வேண்டியது நமது கடமை. அறிமுக இயக்குநர் கவின் பிரபல இயக்குநர் சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது.
நடிகர் முகின் மிக உற்சாகமான இளமை துள்ளலுடன் இருக்கிறார். அது அவரது நடிப்பிலும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. நடிகை மீனாக்ஷி அழகான தேவதை போன்று இருக்கிறார். பிரபு, சூரி ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பினை அளித்துள்ளனர். அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பொள்ளாச்சியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டுவருகிறோம்" என்றார்.
பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இதையும் படிங்க: இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆதி?