ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக 'பிக்பாஸ்' புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிஃப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நடிகர் சிவகார்த்திகேயன் குரலில் வெளியான 'இன்னா மயிலு..' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தை ஜூன் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனையடுத்து லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவீந்திரன் சந்திரசேகர், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கூறியதாவது, "லிஃப்ட் படம் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியிட்டுக்குத் தயாராகவுள்ளது. தமிழ் சினிமாவில் 'லிஃப்ட்' திரைப்படம் 'ஈவில் டெட்' பாணியில் இருக்கும். ஜுன் 20ஆம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்து விட்டு, திரையரங்குகளில் வெளியிடக்கூடிய சூழலே இல்லை என்றால் மட்டுமே டிஜிட்டல் தளத்தில் வெளியாகும். ஆனால், லிஃப்ட் திரையரங்கிற்கான திரைப்படம்" என்றார்.