பிக்பாஸ் 7ஆவது நாள், கமல் ஹாசனின் புத்தகப் பரிந்துரையுடன் தொடங்கியது. உலக மனநல நாளை முன்னிட்டு நரம்பியல் மருத்துவ வல்லுநரான வில்லியனூர் ராமச்சந்திரன் எழுதிய ‘The Emerging Mind’ புத்தகத்தைப் பரிந்துரைசெய்தார் கமல்.
பிறகு அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல் ஹாசன், வழக்கமாக நடக்கும் எலிமினேஷன் இந்த முறை கிடையாது என்றார். தொடர்ந்து வீட்டில் ஒருவாரம் நடைபெற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார். முதல் வாரம் என்பதால் யாரைப் பற்றியும், யாரும் குறை சொல்லாமல் பாசிட்டிவ் (நேர்மறை) விஷயங்களை மட்டும் சொல்லி தப்பித்துவிட்டனர்.
இதைக் கேட்ட கமல் ஹாசனோ, 'அப்போ இங்க எதுவுமே பிரச்சினை இல்லை அப்படித்தானே. கன்ஃபெஷன் ரூம், கன்ஃப்யூஷன் ரூமாக மாறும்போது தெரியவரும்' என்று நக்கல் கலந்த சிரிப்புடன் முடிக்கிறார்.
படத்தையே அலசு அலசுனு ரிவ்யூ பண்ணும் அபிஷேக்கிடம், மனிதர்கள் பற்றி ரிவ்யூ சொல்லுங்கனு சொன்னா, அவர் சும்மா விடுவாரா! எழுந்து நின்று இசை வாணி முதல், சின்ன பொண்ணு வரை அனைவர் பற்றியும் அழகாக பாசிட்டிவான விஷயங்கள் குறித்து தெரிவித்தார்.
அனைவரையும் பற்றி மிகவும் ஜாலியாகச் சொன்ன அபிஷேக், பிரியங்கா, சின்ன பொண்ணு இருவர் பக்கம் வரும்போது, அம்மா, அக்கா நினைவுக்கு வருவதாகக் கூறி கண்ணீர் வடித்தார். ஒருவர் அழுதால், அவரைச் சென்று கட்டியணைத்து, சமாதானம் செய்வது வழக்கம் தானே. அதை இருவரும் சென்று செய்து, அபிஷேக்கை சமாதானம் செய்தனர். (ஆரம்பிச்சிட்டாங்கய்யா... அக்கா-தம்பி பாசத்தை)
அடுத்தாக லைக், டிஸ்லைக் கேம் மூலம் தனது நாரதர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் பிக்பாஸ். (அது வேற எதுவும் இல்ல... எலிமினேஷனுக்கான படலம் தொடங்கப்போகிறதுபோல அதநாளதான் சின்னதா சிண்டு முடிச்சு விட்டுருக்காங்க)
முதல் நபராக அனைத்தையும் நான் வித்தியாசமாகத்தான் பார்ப்பேன் என்று சொல்லும் ராஜு வந்தார். அவர் நிரூப்புக்கு டிஸ்லைக்கும், அண்ணாச்சிக்கு லைக்கும் கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நபராக வந்த போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு லைக்கும், பிடிக்காதவர்களுக்கும் டிஸ்லைக்கும் கொடுத்தனர்.
இதில் அதிகமாக டிஸ்லைக் பெற்றவர்களில், அக்ஷரா, நாடியா, தாமரை செல்வி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றன. நாடியா இந்த வீட்டில்தான் இருக்கிறாரா? என்ற சந்தேகம் நமக்கே இருக்கும்போது, போட்டியாளர்கள் அவருக்கு டிஸ்லைக் கொடுத்தது ஒன்று அவ்வளவு ஆச்சரியமில்லை.
ஆனால் அக்ஷரா மற்ற அனைவரிடம் இயல்பாகப் பழகும்போது, அவருக்கு எப்படி டிஸ்லைக் வந்தது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அதனால்தான் என்னவோ அவரும் அழுதார்போல.
இப்படி மாற்றிமாற்றி சிலர் மட்டும் லைக், டிஸ்லைக் வாங்க வருண், சின்ன பொண்ணு, இசைவாணி மட்டும் எதுவும் வாங்காமலிருந்தனர். இதனையடுத்து அடுத்த வாரம் நாமினேஷன் இருக்கு, அப்போ வில்லன் யார்? என்பது தெரியவரும் என்பதோடு கமல் தனது வேலை முடிந்தது என்று கிளம்பிவிடுகிறார்.
தாமரை செல்வியை அமரவைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கிறார் பிரியங்கா. உனக்கு என்ன செய்தால் சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்தால் போதும். யார் நம்மை எப்படி நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாதே என்றார்.
தனக்கு டிஸ்லைக் வந்ததை நினைத்து, யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து அக்ஷரா அழுவதோடு 7ஆம் நாள் நிகழ்ச்சி முடிகிறது.
உண்மையான பிக்பாஸ் நிகழ்ச்சியே இன்றிலிருந்துதான் தொடங்குகிறது. ஏன் இப்படினு நீங்க யோசிக்கலாம். வாரத்தின் முதல் நாள் என்பதால் நம்ம பிக்பாஸ், நாமினேஷன் படலத்தைத் தொடங்குவார். அதற்கு அப்புறம்தான் தெரியவரும், இந்தப் பாச குடும்பத்தில் நிகழப்போகும் அடுத்தடுத்த பிரளயங்கள்!
உங்களை மாதிரிதான் நாங்களும் இன்றைய எபிசோட் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.
இதையும் படிங்க: BB DAY 5: சண்டையில் ஆரம்பித்து டீ டம்ளரில் முடிந்த நிகழ்ச்சி