தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய கமர்சியல் ஹீரோவாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். தனக்கான மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் உயர்த்தி வருகிறார். நடிப்பில் மட்டுமின்றி பாடல் எழுதுவது, பாடுவது, படங்கள் தயாரிப்பு என்று பன்முக திறமையைக் காட்டி வருகிறார். தனது எஸ்கே புரொடக்சன் மூலம் 'கனா' எனும் படத்தை முதல் முறையாக தயாரித்தார். நெருப்புடா பாடம் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜை இயக்குநராக அறிமுகம் செய்தார்.
மகளிர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரிய வசூலையும் ஈட்டியது. விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும் இப்படம் பெற்றிருந்தது.
இந்நிலையில், தற்போது 10வது நார்வே திரைப்பட விழாவில் 'கனா' திரைப்படம் திரையிடப்பட்டது. சிறந்த சமூக விழிப்புணர்வு இயக்குநர் மற்றும் சிறந்த படத்தயாரிப்பு நிறுவனம் எனும் இரண்டு விருதுகளை 'கனா' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த விருது குறித்து அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது நண்பனும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், கலையரசு, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உட்பட 'கனா' படக்குழுவினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.