சென்னை: 'சினம்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
சமீபகாலமாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவருகிறார் அருண் விஜய். அவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மாஃபியா' படம் பிப்ரவரி 21ஆம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
இது ஒரு புறம் இருக்க விஜய் ஆண்டனியுடன், அருண் விஜய் இணைந்து நடித்து 'அக்னி சிறகுகள்' படம் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து காவல் அதிகாரியாக அருண் விஜய் நடிக்கும் 'சினம்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
இது குறித்து அருண் விஜய் கூறியதாவது: "இந்த 2020ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள்ளது. ரசிகர்களின் அன்பும், பேராதரவும் மட்டுமல்லாமல், ரிலீஸாக போகும் படங்களின் மீது காட்டும் ஆர்வமும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அவர்களின் அன்பு இன்னும் கடுமையாக உழைக்க எனக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது.
'சினம்' த்ரில்லர் ஆக்ஷன் விரும்பிகளுக்கு பெரும் விருந்தாக இருக்கும். அதே நேரம் உணர்வுப்பூர்வமாக கவரும்படி இருக்கும். ரசிகர்களை மனதில் வைத்து மிக அருமையாகப் படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் குசேலன்.
மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். டீஸர், இசை வெளியீடு, திரை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.