சென்னை: கடந்த நவ.2ஆம் தேதி, நடிகர் விஜய் சேதுபதி தனது நண்பர் மகா காந்தி என்பவருடன் விமானத்தில் பயணித்து பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது விமானத்தில் மகா காந்திக்கும், விஜய்சேதுபதியின் உதவியாளர் ஜான்சன் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
அதன் பிறகு மகா காந்தி என்பவர், நடிகர் விஜய் சேதுபதி விமானத்திலிருந்து இறங்கியதும் பெங்களூரு விமான நிலையத்தின் வெளியே வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் உதை
உடனடியாக அங்கிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையினர் இருவரையும் தடுத்து நிறுத்தினர். பிறகு இருவரும் தாங்களாகவே சமாதானம் செய்துகொண்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும், விஜய் சேதுபதிக்கும் தாக்குதலில் ஈடுபட்டவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இருதரப்பும் சமாதானம் செய்துகொண்டதாக பெங்களூரு காவல் துறையினர் விளக்கமளித்தனர்.
உதைத்தவரின் பேச்சு
இருப்பினும், விஜய் சேதுபதியை உதைத்ததாகக் கூறப்படும் மகா காந்தி பல யூ-ட்யூப் சேனல்களுக்குப் பேட்டி அளித்துவருகிறார். அதில், 'விஜய் சேதுபதியை ஏன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு செல்லவில்லை' எனக் கேட்டதற்கு, யார் குரு என விஜய் சேதுபதி பதிலளித்ததாகவும், மேற்கொண்டு முத்துராமலிங்கத் தேவரை அவதூறாகப் பேசியதால்தான் அவரை உதைத்தேன்’ எனவும் அவர் கூறி வருகிறார்.
இந்த காணொலிகள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கமாக ரூ.1,001 வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.
அந்த ட்வீட்டில்,"தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்புக் கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதைக்கு தலா ரூ. 1,001" எனக் குறிப்பிட்டுள்ளது.
வி.சே-வை துரத்தும் சர்ச்சைகள்
இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்களும், ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் பதிவு குறித்து விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம் - உண்மை தகவல் என்ன?