இயக்குநர்களில் இளையவர்... புதியவர்... ஆனாலும் ஆண் தேவதையாய் பிரமிக்க வைத்தவர்... இத்தனை சீக்கிரம் தாமிரா என்ற தங்கத்தை இழப்போம் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை... மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய புதிய தலைமுறை இயக்குநர்களில் ஒருவர்தான் தாமிரா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இயக்குநர் தாமிரா தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,
''இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்
இனி யாரோடும் பகைமுரண் இல்லை
யாவரும் கேளிர்''
என்று பதிவிட்டு,
’’அன்பென்று கொட்டு முரசே’’
என்று கமெண்ட்டில் பதிலளித்திருந்தார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாமான்யர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், அமைச்சர்கள், நடிக, நடிகைகளும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் கூட நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் திரைத்துறையில் பேரிழப்பை ஏற்படுத்தியது.
இயக்குநர் தாமிரா எனும் காதர் மொகைதீன்(54) கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால், சென்னை அசோக் பில்லரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27) காலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார்.
இவர் ’ரெட்டைச்சுழி’, ’ஆண் தேவதை’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ’ரெட்டைச்சுழி’ படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் இணைய வைத்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தில் இரு இமய இயக்குநர்களின் நடிப்புத்திறனை மிக அருமையாக வெளிக்கொணர்ந்திருந்தார் தாமிரா. இந்த படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. நீண்ட காலத்திற்கு பிறகு சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்த ’ஆண் தேவதை’ என்ற படத்தை தாமிரா இயக்கியிருந்தார். அந்தப் படத்திற்கு உரிய தியேட்டர்கள் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்குப் போகவில்லை.
தனது மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்குவதற்காக, தாமிரா கதையை தயார் செய்து வைத்திருந்தார். மேலும், நடிகர் சத்யராஜுடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். தாமிரா கடைசியாகக் கலந்துகொண்டது எழுத்தாளர் எம். கே. மணி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. திரைப்பட இயக்கம் மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இருந்த தாமிரா 10 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது. தாமிராவின் மனைவி பஷிரியா, மகன்கள் முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான், மகள் பவ்ஷியா. மருத்துவமனைக்குயிலிருந்து நேராக திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்படும் தாமிராவின் உடலுக்கு, அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.
இயக்குநர் தாமிராவின் மறைவிற்கு திரையுலகினர், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.