இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் அன்பிற்கினியாள் படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும் என்கிறார்கள்.
ஏனென்றால் அப்பா - மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா - மகள் நடித்தால் எப்படியிருக்கும்...? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு 'அன்பிற்கினியாள்' என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு.
'அன்பிற்கினியாள்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கோகுல். ஏனென்றால், சில முக்கிய காட்சிகளில் தனது உடல் அசைவுகள், கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார். மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தின் தனது கேமரா கோணங்களால் அழகூட்டிய மகேஷ் முத்துசுவாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் கோகுல் - மகேஷ் முத்துசுவாமி இருவருமே இணைந்து பணிபுரிந்து வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.
அதில் இரவு நேரக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமாக்கியதால், இந்தப் படத்துக்கும் அவருடனே பணிபுரிந்திருக்கிறார் கோகுல். இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஜாவித் ரியாஸ். இவர் 'மாநகரம்' படத்தின் பின்னணி இசை மூலம் பேசப்பட்டவர். கோகுலின் படங்களுக்கு எப்போதுமே அனைத்து பாடல்களையும் எழுதுபவர் லலித் ஆனந்த். அவர் தான் ஜாவித் ரியாஸ் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என கோகுலிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.
அந்த நம்பிக்கையில் பணிபுரிந்த கோகுலைப் பின்னணி இசையில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தனது முந்தைய படங்களின் பின்னணி இசையை விட, இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்தளவுக்கு மிரட்டியிருக்கிறார். த்ரில்லர் படங்களுக்கே உரிய இசையாக இருந்தாலும், அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குநர் கோகுல்.
இந்தப் படம் அப்பா - மகள் உறவை மையப்படுத்திய த்ரில்லராக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பார்வையாளர்களுக்குத் திரையில் ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குத் திரைக்கு வரவுள்ளது. திரைக்கதை அமைத்து கோகுல் இயக்கியுள்ளார். அருண் பாண்டியன் தயாரித்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: சாதியை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும் - 'குழலி' பட இயக்குநர்!