கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிய அமலாபால் தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது அமலாபால் கன்னடத்தில் 'யூ டர்ன்' படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான 'குடி யெடமைதே' (Kudi yedamaithe) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அதேபோல் மற்றொரு வெப் சீரிஸ் தாெடராக தெலுங்கில் 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) என்ற ஒரிஜினல் தொடரில் ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஃபேன்டஸி திரில்லராக உருவாகும் இத்தொடரில் அமலாபால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரங்களாக இல்லாமல் காவல்துறை அலுவலர், டெலிவரி பாய் என இருவருக்குள்ளும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது.
இதுதவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிலிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலாபால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் 'கடாவர்' (cadaver) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். தற்போது அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது நடிப்பில் எந்த படங்களும் ரிலீசாகாத போதிலும் தனது வித்தியாசமான கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளபக்கத்தில் பதிவேற்றி, தன் மீது இருக்கும் வெளிச்சம் எப்போதும் விலகாதவாறு பார்த்துக் கொண்டு வருகிறார் அமலாபால்.
சினிமாவுக்கு வந்த புதிதில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க போட்டா போட்டி போட்ட அவர், தற்போது தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாபாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளது.
நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதிய திரைப்படம் அறிவிப்பு