2008ஆம் ஆண்டு முதன்முறையாக 'நாயர் சான்' என்ற திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஜாக்கி சான் நடிக்க இருப்பதாகவும் இதனை பிரபல இயக்குநர் ஆல்பர்ட் ஆண்டனி இயக்குவதாகவும் கூறப்பட்டது.
பட அறிவிப்பு வெளியாகி பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இப்படம் மீதான பேச்சு இதுவரை நின்றுபோகவில்லை. 'நாயர் சான்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தன.
ஐயப்பன் பிள்ளை மாதவன் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும், இதில் ஐயப்பன் பிள்ளை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.
மேற்படிப்புக்காக கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற ஐயப்பன் பிள்ளை மாதவன் அங்கிருந்து கொண்டே இந்திய சுதந்திப் போரட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். ஜப்பானில் வசித்துவந்த அவர் அங்கு மக்களால் நாயர் சான் என அறியப்பட்டு வந்துள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜாக்கி சானும் மோகன்லாலும் நடிக்கிறார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதன் இயக்குநர் ஆல்பர்ட் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.
மோகன்லால் நடிப்பில் 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்', 'ராம்' உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.