ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. கரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. எனினும், இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் அஜித், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.!
கடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்திருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கின்றன. முன்னரே அறிவித்தப்படி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும், உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடம் ட்விட்டரில் வலிமை அப்டேட் கேட்டிருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க...மோடியிடம் 'வலிமை' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்!