இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்களின் செயல்பாடு என்பது முக்கியமான ஒன்று. உலகின் பிரச்னைகள், அரசியல் முக்கிய நிகழ்வுகள், சினிமா பிரபலங்களின் பிறந்த நாள், திரைப்பட ரீலிஸ் என எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் அதை சமூக வலைதளமான ட்விட்டரில் பேசியும் கருத்து தெரிவித்தும் அந்த நிகழ்வுகளை ட்ரெண்ட் செய்து விடுவார்கள் நெட்டிசன்கள்.
இந்நிலையில், ட்விட்டர் இந்தியா கடந்த ஆறு மாதங்களாக அதிகம் ட்ரெண்ட் செய்த ஹேஷ்டேக்கின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதலிடத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஹேஷ்டேக் உள்ளது. அதனைத் தொடர்ந்து 'மக்களவை தேர்தல் 2019' இரண்டாவது இடத்திலும் 'உலகக்கோப்பை' மூன்றாவது இடத்திலும்; தெலுங்கு ’பிரின்ஸ்’ மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'மஹரிஷி' நான்காவது இடத்திலும் 'நியூ ஃபுரஃபைல் பிக்' ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
பொதுவாக அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு அதை உலகளவிலும் இந்தியளவிலும் ட்ரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் ஆறு மாதகாலங்களாக தேர்தல், உலக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான ஹேஷ்டேக்குகளை முந்தி, அஜித்தின் விஸ்வாசம் முதல் இடத்தைப் பிடித்திருப்பது ரசிகர்கள் அஜித் மீது உள்ள விஸ்வாசத்தையும் மரியாதையையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஏற்கனவே 'நேர்கொண்ட பார்வை' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்த செய்தி தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.