தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் நடிகர் கார்த்தி, நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடித்து விவசாயிகள் படும் வேதனையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கான ஒரு பரிசுப் போட்டியை கார்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்.
மேலும், உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது முயற்சிக்கு விவசாயிகள், பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.