காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், ஜில்லா, விஸ்வாசம், மெர்சல், உத்தமபுத்திரன், பிரம்மன், கடைசி பெஞ்ச் கார்த்தி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் சுரேக்கா வாணி. இவர், தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் சுரேஷ் தேஜா தெலுங்கு சின்னத்திரையில் எழுத்தாளராகவும், மா டாக்கீஸ், ஹார்ட்பீட், மொகுட்ஸ் பெல்லம்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். சுரேஷ் தேஜா மா டிவியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது சுரேக்காவும் அவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
சுரேக்கா - சுரேஷ் தம்பதிக்கு சுப்ரிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த சுரேஷ் தேஜா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இரங்கல் செய்தி தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சுரேஷ் தேஜாவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.