நரமாமிசம் உண்ணும் குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் 'ட்ரிப்'. பிப்ரவரி 5ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கிய இப்படத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சாய் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோ சார்பில் விஸ்வநாதன், பிரவீன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறுகையில், ”இயக்குநர் சாம் ஆண்டனின் '100' படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகி பாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என அப்போது யோகி பாபு கூறினார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன்.
தமிழ் சினிமா ஏற்கனவே 'ஜாம்பி'களை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது.
ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மிகப்பெரும் தொகையை செலவிடுகிறார்கள். இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரும் முன்னேற்பாடுடன் துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்ட 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால்தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து இப்படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது, விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை 'மாஸ்டர்' படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. 'மாஸ்டர்' படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன. சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
யோகி பாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டைவிட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெரும் இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி என்றார்.
நடிகை சுனைனா கூறுகையில், இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாக பார்த்துக்கொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஒரு நாயுடன் நடிக்க போவதாக கூறினார்கள் ஆனால் படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது.
அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம். படத்தில் உழைத்தவர்களுக்கும் பெரும் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என்றார்.
நடிகர் கருணாகரன் கூறியதாவது, இப்படத்தில் பணிபுரிந்தது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது இப்படத்தின் ஹீரோயின்கள்தான். அவர்களது இயல்பான நிலையிலிருந்து வெளிவந்து ஆக்சன் காட்சிகள் முதற்கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்கள். ராகேஷ் இப்படத்தின் மூலம் எனக்கு மிகச்சிறந்த நண்பராக மாறிவிட்டார். டிஸ்கவரி தமிழ் சேனலில் தொகுப்பாளராக எனக்கு பயிற்சி அளித்தார். அந்த சேனலில் எனது பணியை பார்த்தது எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அனைத்து புகழும் ராகேஷுக்கு உரித்தானது என்றார்.
இறுதியாக தயாரிப்பாளர் விஸ்வநாதன் பேசுகையில், திரை உலகில் எனக்கு தெரிந்த ஒரே நபர் டென்னிஸ் மட்டும்தான். அவர் என்னிடம் திரைக்கதையை சொன்ன விதம் அபாரமாக இருந்தது. யோகி பாபு, கருணாகரன் முதல் அனைவரும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். பிரவீன் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாயகிக்காக நிறைய பேரை தேடினோம். சுனைனா இப்படத்தை ஒப்புகொண்டதற்கு நன்றி என்று கூறினார்.