தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான சிம்ரன், 1997ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் திரைப்படமான 'விஐபி’ மற்றும் 'ஒன்ஸ்மோர்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வெளியான இவ்விரண்டு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், இது குறித்து நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "23 ஆண்டுகளுக்குப் பிறகும், சிவாஜியுடன் பணியாற்றிய நினைவுகள் குறித்து பகிர்வது மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு கனவு நிஜமானது. அவரது ஆசியும், அவரிடமிருந்து கற்றுக் கொண்டவையுமே என்னை உருவாக்கியது என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் மற்றொரு பதிவில், "நண்பன் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் தமிழில் நடிக்கத் தொடங்கியது அதிர்ஷ்டம். என் கடைசி மூச்சு வரை, தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்"என்று கூறியுள்ளார். இவரின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.