சென்னை: பொது இடத்தில் அநாகரிமா நடந்ததாகக் கூறி தாக்கப்பட்டதாக நடிகை சம்யுக்தா ஹெக்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பள்ளிப்பருவத்தில் காதலியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
பெங்களூருவைச் சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள், உடற்பயிற்சி மற்றும் கையில் வளையங்களை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள அகரா ஏரி அருகே உள்ள பூங்கா ஒன்றில் தனது நண்பர்களுடன் நடிகை சம்யுக்தா கையில் வளையங்களை வைத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள், சம்யுக்தாவின் ஆடை குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்யுக்தாவின் இரண்டு தோழிகளும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நடிகை சம்யுக்தா ஹெக்டே, பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்புக்கு வந்தார். அந்த நேரத்தில் அங்கு நடந்த நிகழ்வுகளை பதிவு செய்த அவர், அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
பூங்காவுக்கு உடற்பயிற்சி செய்ய நண்பர்கள் மூன்று பேருடன் வந்தேன். எனது உடையை காரணமாக காட்டி அங்கிருந்த சிலர் எனது நண்பர்களை தாக்கினர். மேலும் ஆபாச நடனம் ஆடியதாக பொய் புகார் கூறினர். ஒர்க்கவுட் செய்வதற்காக ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் ஒர்க்கவுட் பேண்ட் அணிந்து வந்து வந்ததால், எனது ஆடை குறித்து விமர்சனம் செய்கின்றனர்.
சில ஆண்கள், கன்னட சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் போதைப் பொருள் வழக்கில் தொடர்புபடுத்தி பேசி மிரட்டுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் சம்யுக்தா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பூங்காவை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டி இருப்பதாகவும், லைவ் வீடியோவில் தெரிவித்தார்.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் சம்யுக்தாவைப் பார்த்து, பொது இடத்தில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டாமா என்று கேள்வி எழுப்புவதும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று, மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்தப் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் 'ஜெயம்' ரவி பட நடிகை கைது!