பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். அவர் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ரைசா அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜா கூறுகையில், "இது ஒரு தாய், மகள், 14 வயது இளைஞரின் திரைப்படம். ரைசா வில்சன், ஹரீஷ் உத்தமன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இதில் நடித்துள்ளார்.
எமோசனலான, த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடத்தப்பட்டது. கரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில், 500க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. முழு படப்பிடிப்பும், முடித்துத் திரும்பி விட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று (ஆக.25) தொடங்கியுள்ளது.
படத்தில் வரும் அடுத்த காட்சிகள் என்னவென்று எளிதில் யூகிக்க முடியாத வகையில் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது" என்று கூறியுள்ளார்.