சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன், வேலையில்லா பட்டதாரி 2, ப்யார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்துவரும் ரைசா, முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பீஹென்ஸ்ட் என்ற சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.
அங்கிருந்த மருத்துவர் பைரவி செந்திலின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி வேறு இரண்டு மருத்துவர்கள் மூலம் போடாக்ஸ் (BOTOX) சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டுள்ளார். அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.
பத்து நாட்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ரைசா மீண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சை எடுத்துள்ளார். இந்த சிகிச்சைக்குப் பின்னர், ரைசாவின் வலது கண்ணிலிருந்தும், கன்னத்திலிருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் முகமும் வீங்கியுள்ளது. இதற்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையே காரணம் என ரைசா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நஷ்ட ஈடாக ரூ. 1 கோடி ரூபாய் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரைஷா.
அந்த நோட்டீஸில் 15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவர் பைரவி நேற்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"ரைசாவுக்கு ஏற்கனவே இதே சிகிச்சை முறை பலமுறை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்து விளக்கம் பெறப்பட்டு ரைசாவிடம் ஏற்கனவே கையெழுத்து பெறப்பட்டது.
சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனை மீறும்பட்சத்தில் இதுபோன்ற பின் விளைவுகள் ஏற்படும்.
ஆனால், அது சில தினங்களில் சரியாகிவிடும். இது அவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் மக்களிடம் நற்மதிப்பு பெற்றுள்ள மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ரைசா புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனால் எனக்கும் மருத்துவமனையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூன்று தினங்களுக்குள் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்க தயார் - ஷங்கர் தரப்பு