சென்னை : 2K கிட்ஸ்களுக்கு தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றாலே நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன். ஆனால், 1990களில் நவரச நாயகன் கார்த்திக்கின் அம்மாவாக, விசுவின் மனைவியாக நடித்த கமலா காமேஷை 90'S கிட்ஸ் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள்.
அதிலும், சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாகவே நடிப்பில் வாழ்ந்திருப்பார். இந்த கமலா காமேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். 480க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், 1974 இல் காமேஷ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் உமா. நன்றாகப் பாடும் திறனும், மேடையேறி நடிக்கும் சாதுர்யமும், திரையுலகில் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதும் எனக் கமலா காமேஷின் திரை வாழ்க்கை நெடியது.
இவர் ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் எந்த ஒப்பனையும் இல்லாமல் நடித்திருந்தார். இதையடுத்து பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தார்.
அவருக்கு அப்போது வயது 24 தான். சிறுவயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளியான மூன்று முகம் திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆகாய கங்கை, மணல் கயிறு, டிராவிட் அங்கில், இதுதாண்டா சட்டம், சின்ன கவுண்டர், புலன் விசாரணை, தங்கமான தங்கச்சி, காவல் நிலையம், சம்சாரம் அது மின்சாரம், சட்டம் ஒரு விளையாட்டு, விஷ்வதுளசி, குடும்பம் ஒரு கதம்பம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பொண்டாட்டி தேவை, கடலோரக் கவிதைகள் பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரை வரலாற்றில் சம்சாரம் அது மின்சாரம் படம் ஏற்படுத்திய தாக்கம், மிகப் பெரியது. மிக குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, மிகப் பெரிய வசூல் மழையில் நனைந்தது. இப்படம், 41 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் பொருளாதாரப் பிரச்சினை தான் இக்கதையின் அடிநாதம்.
இதில் கோதாவரி என்ற பெயரில் கமலா காமேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 1952இல் பிறந்த இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரைப்பிரபலங்கள் வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பார்வையால் கட்டிபோடும் 'டாக்ஸிவாலா' பிரியங்கா ஜாவல்கர்!