அதிரடியான கமர்சியல் படங்களில் நடித்து வரும் சூர்யா, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் 36 வயதினிலே, பசங்க -2, 24, கடைக்குட்டி சிங்கம், உறியடி-2, ராட்சசி உள்ளிட்ட நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தயாரித்து வருகிறார். இறுதியாக ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது. அடுத்து குலேபகாவலி பட இயக்குநர் கல்யாண்ஜி இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் 'ஜாக்பாட்' எனும் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தான் தயாரிக்கும் அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார் சூர்யா. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் எழுதி இயக்குகிறார். இப்படத்திலும் கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்க்கு ’பொன்மகள் வந்தாள்’ என்று அழகிய தமிழ் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ராம், பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு ஒளிபதிவு செய்த ராம்ஜி, இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியற்றுகிறார். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையிலுள்ள அகரம் அறக்கட்டளையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனரும், நடிகருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் படத்தில் நடிக்கும் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.