சென்னை மாவட்டம் வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நெடுமாறன். இவருக்குக் கடந்த 2013ஆம் ஆண்டு அம்ரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு அம்ரிஷ் தனக்கு தெரிந்தவர்களிடம் சக்தி வாய்ந்த ரைஸ் புல்லிங் இரிடியம் கலசம் இருப்பதாகவும், அதை வெளிநாட்டில் விற்றால் பல கோடி ரூபாய் லாபம் வரும் எனவும் நெடுமாறனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய நெடுமாறன் 27 கோடி ரூபாய்வரை பல்வேறு தவணைகளாக அம்ரிஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தைத் பெற்றுக்கொண்ட அம்ரிஷ், போலியான கலசம் ஒன்றை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த நெடுமாறன், இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அம்ரிஷை இன்று (மார்ச்.16) கைது செய்தனர்.
தொடர்ந்து அம்ரிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பதும் ’நானே என்னுள் இல்லை’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாகவும், சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அம்ரிஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.