தமிழ்த் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அடுத்தடுத்து கிழக்கு கடற்கரைச் சாலை, அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், ஆர்யா, கூடல்நகர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனத்தை வெகுவாக ஈர்த்தார்.
2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் படத்தின் மூலம் அறிமுகமான பாவனா இதுவரை 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் கார்த்திகா.
இவர் தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் வெயில், தீபாவளி திரைப்படங்கள் மூலமாகத் தான் ஆழப் பதிந்தார் என்று சொல்லலாம். தீபாவளி படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய 'காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்' என்னும் பாடலில் வரும் "தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை. நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பிவிட்டேன் மறக்கவில்லை" வரிகளுக்கு அவரின் முகபாவனை அப்படியே பொருந்தியிருக்கும். அந்தக் காட்சியில் அவர் தேவதையாகவே ரசிகர்களுக்குத் தோன்றுவார்.
2010ஆம் ஆண்டு அஜித்துடன் நடித்த அசல் படத்திற்குப் பிறகு எந்தத் தமிழ் படங்களிலும் பாவனா நடிக்கவில்லை. கன்னடம், மலையாளம் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்திவந்தார். 2018ஆம் ஆண்டு கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
கண்ணன் வரும் வேளை பாடலுக்கு நடனமாடிய பாவனா தமிழ் சினிமாவில் மீண்டும் வரும் வேளைக்காகக் காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.