சென்னை: 'அவன் இவன்' படத்தை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஆர்யா - விஷாலுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, தமன் இசை அமைக்க சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனிமி படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் தீபாவளி ரிலீசாக நாளை (நவம்பர் 4) திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் எனிமி படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.
இதனிடையே விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசித்துள்ளார். இந்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு மலைப்பாதை வழியாக நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனத்தின் போது நகரி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகையுமான ரோஜா விஷாலை சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது, எனிமி திரைப்படம் திபாவளி தினத்தன்று வெளியாவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் எனிமி வெளியாகிறது.
கடந்த மே மாதமே சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் அப்போது கரோனா பரவல் காரணமாக முடியவில்லை.
இப்போது தரிசனம் செய்துள்ளேன். இதில் மறைந்த புனித்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியுள்ளேன். நல்ல மனிதர். இப்போது நம்மிடையே இல்லை. அவர் விட்டு சென்ற பணிகளை நான் என்னால் முடிந்த வரை செய்வேன். அதன் தொடக்கம் தான் புனித் தொடங்கி வைத்த ஏழை எளிய குழந்தைகளின் கல்வி செலவை நான் இப்போது ஏற்றிருப்பது "என்றார்.
இதையும் படிங்க: 'நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்' - எனிமி படத் தயாரிப்பாளரை பாராட்டிய விஷால்