குமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா ஜெகன் என்பவரைக் காண்பதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது நிருபர்கள் எழுப்பியப் பல்வேறுக் கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ”நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையிலேயே சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்குக் கவலையில்லை” என்று கூறினார்.
விஜய் படத்திற்குத் தொடர்ந்துவரும் எதிர்ப்புகள் பற்றிக் கேட்டபோது, ”சமூக சிந்தனையோடு சில கருத்துக்களைத் தெரிவிக்கிறோம். இதற்காக விஜய் படத்தை எதிர்ப்பார்கள் என நினைக்கவில்லை. பிகில் படத்தை வெளியிடுவதில் பிரச்சனை இருக்காது. தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது” என்றும் கூறினார்.
மேலும், பொதுவாக விஜய் கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகிறதே என்ற நிருபர்களின் கேள்விக்கு ”விஜய் கூறும் கருத்துகளை எதிர்க்கிறார்கள் என்றால், விஜய் வளர்ந்து கொண்டே வருகிறார் என்று அர்த்தம். காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்றும் பதிலளித்தார்.