அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா கல்லூரியில் 'தடம் விதைகளின் பயணம்' என்ற பெயரில் விழா நடைபெற்றது. இதில் சிவக்குமார், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, கார்த்தி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், 'அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களைப் போல்தான். நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சம் மிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவணைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இருந்ததால்தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது.
நடிகர் சூர்யா பேசுகையில், 'அகரம் அறக்கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலுவும், ஜெயஶ்ரீ அவர்களும்தான் முக்கிய காரணம். இரவு, பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசுர உழைப்பினால்தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம். மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி, அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை.
மூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமூகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நமக்கு சமநிலை வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும் ' என்றார்.
இதையும் படிங்க: 'ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் இதுதான்' - சரத்குமார் ஓபன் டாக்!