2டி என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து நடிகர் சூர்யா தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
சூரரைப் போற்று படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்..
சில படப்பிடிப்புகளில் மட்டும்தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்வதாகத் தோன்றும். நந்தா, பிதாமகன், மெளனம் பேசியதே, காக்க காக்க உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. அந்த அனுபவத்தைப் போலவே மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம் என எண்ணிய படம்தான் சூரரைப்போற்று. இரண்டு மாதங்கள்தான் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஒவ்வொரு நாளுமே புதிய அனுபவங்கள். புதுவிதமான சந்தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். 'சேது' பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, 'இறுதிச்சுற்று' படம் பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இயக்குநர் சுதா கொங்கரா உடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்படியான படம்தான் 'சூரரைப்போற்று'. எளிமையாகச் சொன்னால் இந்த படப்பிடிப்பு அழகான பயணமாக இருந்தது.
சூரைரைப்போற்று திரைப்படம் சிம்ப்ளி ப்ளை (SIMPLY FLY) என்ற புத்தகத்தின் ஐடியாவாக இருந்தாலும், அதை 44 பக்க திரைக்கதையாக எழுதினார் இயக்குநர் சுதா கொங்கரா. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெடல்கள், பல்வேறு மாறுதல்கள் என இயக்குநரின் ஒவ்வொரு நகர்விலும் நானும் கூடவே பயணித்தேன். இந்தியாவின் முகத்தை ஒரு சிலர்தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கோபிநாத்.
விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய சுவாரசியமான திரைக்கதையை வெறுமனே பாட்டு, சண்டைக் காட்சி இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே நம்ப வைக்க முடியும் என்பதை 'சூரரைப்போற்று' உருவான விதத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். படமாக திரையில் பார்க்கும்போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன் என்கிறார் நடிகர் சூர்யா.
திரைப்பயணத்தில் பெண் இயக்குநர் சுதா கொங்குராவுடன் பணிபுரிந்த அனுபவம்...
இயக்குநர்களின் ஆண், பெண் என பாலின பேதம் இல்லை. பள்ளி, கல்லூரியில் பெண் ஆசிரியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா?. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற தனிப்பார்வை இருந்திருக்கலாம். இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளோம். பெண் இயக்குநர் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை. 'சூரரைப்போற்று' படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அடுத்தக் கதை எழுதும்போதும் என்னை நினைத்தே எழுதக் கேட்டிருக்கிறேன்.
சூரரைப் போற்று படத்தின் கதாபாத்திரம் குறித்து...
இந்தப் படத்தில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தரியா? எனக் கேட்கும் கதாபாத்திரம். தரையோடு தரையாக இருப்பது மாதிரியான இயல்பான கதாபாத்திரம். உண்மையில் நான் பிரமாதமான நடிகர் கிடையாது. என்னால் கேமரா முன்னால் உடனே நடிக்க முடியாது. ஒரு படத்தில் நடிப்பதைக் காட்டிலும் அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும். ஒரு கதையில் எனது வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தால் அதை உள்வாங்கி கதாபாத்திரமாக மாறிவிடுவேன். அப்படிப்பட்ட படம்தான் 'சூரரைப்போற்று'. படத்தின் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக்தான். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது.
பி அண்ட் சி சென்டர் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு ரீச்சாகும்?
ஒரு ஊருக்கு போக்குவரத்து மிகவும் முக்கியம். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பேருந்து மட்டும்தான் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதான போக்குவரத்து. அவர்களுக்கும் விமான பயணம் வேண்டும்.
ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் இப்படம் இருக்கும். இந்தப் படம் மதுரையில் தொடங்கும். எளிய மக்களிடமிருந்துதான் கதையின் மையம் இருக்கும். எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது அந்நியப்பட்ட கதையாக கண்டிப்பாக இருக்காது.
உங்களின் சமூக கருத்துகள் திரைப்பயணத்திற்கு சிலநேரங்களில் தடையாக இருக்கிறதே?
இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில்தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட்களில் எல்லாம் படப்பிடிப்பு செய்திருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.
சினிமாவில் எது உங்களை முன்னோக்கி நகர்த்துகிறது?
முடியாது, கூடாது என்பதைத் தாண்டிய பயணம்தான் இதற்கு காரணம். ஏன் பண்ணக்கூடாது, இந்த முயற்சியை ஏன் எடுக்கக்கூடாது என்பது மட்டுமே நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடத்தை எனக்கு அளித்துள்ளது. மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும்போது, ஏன் மெனக்கெடக்கூடாது என்ற விஷயம்தான் முன்னோக்கி நகர்த்துகிறது. ஒவ்வொரு புது முயற்சியும் நமக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மை பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
'சூரரைப் போற்று' மாதிரியான வாய்ப்பு வரும்போது, விட்டுவிடக் கூடாது என்பதுதான். விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தன. மிகப்பெரிய விமான போக்குவரத்து துறையில் ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும்போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்பது தான்.
முன்னதாக சில படங்களில் இளமை கதாபாத்திரங்கள் இருந்தாலும்கூட சூரைப் போற்று அனுபவம் எப்படி?
திடீரென்று ஒருநாள் சுதா இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என என்னிடம் சொன்னார். கடைசிவரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன். இயக்குநர் கேட்கவில்லை. மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு 80% உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும்போது, மற்றொரு கதாபாத்திரத்துக்கு 100% உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது அவ்வளவுதான்.
ட்ரெய்லரில் நிறைய காட்சிகள் பிரமாண்டமாக இருந்தது...திரைப்படம் முழுக்க இதை எதிர்பார்க்க முடியுமா?
ட்ரெய்லரில் பார்த்த மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஊர்வசி மேடம், மோகன் பாபு சார், பரேஸ் ராவல் சார், காளி வெங்கட், கருணாஸ் என அனைவருமே சும்மா ஒரு படத்துக்குள் வந்துவிட மாட்டார்கள். அத்தனை பேருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய வசனங்களோ, காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்கும். அப்படியொரு கதை. பலருடைய உழைப்பின் இறுதியில் இரண்டரை ஆண்டு பயணத்தில் உருவான நல்ல திரைப்படம் சூரரைப்போற்று. அதிகமான பொருள்செலவு அடங்கியிருக்கிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேறு படங்களில் நடிக்கவில்லையா?
வெறும் புகழுக்காகவோ, நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதற்காகவோ நான் சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் நிறைவேற்ற முடியாத அளவில் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தக் கதையை கேட்டவுடன் ஏன் இதைப் பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் இயக்குநர் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம்தான்.
இதையும் படிங்க:ரிலீசுக்கு முன்பே 100 க்ரோர் கிளப்பில் இணைந்த 'சூரரைப்போற்று'