ஹைதராபாத் : தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சிவக்குமார். பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த போதிலும் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காதவர்.
இவரின் மூத்த மகன் சூர்யா. 1975 ஜூலை 23இல் சென்னையில் பிறந்தார். சரவணன் என இயற்பெயர் கொண்ட நடிகர் சூர்யா திரைத்துறைக்காக தனது பெயரை சூர்யா என மாற்றிக்கொண்டார்.
இன்று தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக மின்னும் சூர்யா, ஆரம்ப காலக்கட்டங்களில் சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்தார். தனது இளமைக் காலத்தில் துணிக்கடை ஒன்றிலும் வேலை பார்த்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இன்று திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் காணப்படுகிறார்.
தமிழ் சமூகம் மட்டுமின்றி திரையுலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முன்னின்று எதிர்த்துவருகிறார். இவரின் முதல் படமாக நேருக்கு நேர் அமைந்தது.
அடுத்து வெளியான நந்தா (2001), காக்க காக்க (2003), பேரழகன் (2004) மற்றும் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் வெற்றி படமாக திகழ்ந்தன. குறிப்பாக நந்தாவில் ஓராயிரம் யானை கொன்றால் பரணி என மிரட்டியிருப்பார்.
அடுத்து காக்க காக்கவில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக கண்டிப்பான காவல் அலுவலராக மிரட்டியிருப்பார். தொடர்ந்து பேரழகன் படம் மூலம் குடும்ப ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். வாரணம் ஆயிரத்தில் பெண்கள் மனம் கவழும் காதலனாக ஜொலித்திருப்பார்.
“அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல“ பாடல் இன்றளவும் உயிரோட்டம். காதலின் வலியையும், போதைக்கு அடிமையானதையும் தத்ரூபமாக தனது நடிப்பில் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி என்ற பாடலில் உடல் மெலிந்து பதின்ம இளைஞராக அவர் போட்ட துள்ளல் ஊக்கம்.
இவர் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர ஜோடிக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளன.
சூர்யா சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்திவரும் ஒரு நடிகர். அகரம் என்ற லாப நோக்கமற்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்துவருகிறார்.
சிறந்த இந்திய பிரபலங்கள் பட்டியலில் ஆறு முறை சூர்யா இடம்பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி சிறந்த நடிகர், துணை நடிகர் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். எதிர்காலங்களிலும் துரை சிங்கமாக காப்பான் கதிரவனாக சூரரைப் போற்று நெடுமாறனாக 7ஆம் அறிவு போதி தர்மனாக வெற்றிகள் தொடர வாழ்த்துகள்!
இதையும் படிங்க : அமெரிக்கன் ஐஸ்வர்யா ராய்!