மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'சைக்கோ'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படக்குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, வெற்றி விழா நடைபெற்றது.
சென்னையில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், இயக்குநர் மிஷ்கின், ரேணுகா, பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இதில் நடிகை ரேணுகா பேசுகையில், 'சைக்கோ படம் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. மிஷ்கின் படங்களில் நடிக்க வேண்டுமென்று, நீண்ட நாள்களாகக் காத்திருந்தேன். இருப்பினும் அவர் படத்தில் நடிப்பது பற்றி பயம் இருந்தது. அவரது நேர்காணல்களை பார்த்தபோது எப்போதும் இறுக்கமான மனநிலையில்தான் இருப்பார் என்று தோன்றியதுதான் அதற்குக் காரணம்' என்று பேசியுள்ளார்.
அவரைத்தொடர்ந்து நடிகர் சிங்கம் புலி பேசுகையில், '2019இல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தற்போது அது நிறைவேறியுள்ளது. சைக்கோ படத்தில் எனக்கான கதாபாத்திரத்தில் நான் பொருந்தியது எப்படி என எனக்கே சந்தேகமாக உள்ளது.
இந்தப் படம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. சிவப்பு ரோஜா, மூடுபனி போன்ற படங்கள் மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல்தான் சைக்கோ திரைப்படமும், 'கருப்புக் கண்ணாடி' என்ற பெயரில் புதிய சைக்கோ படம் எடுக்கப்பட உள்ளதாக இன்று நாளேட்டில் பார்த்தேன்.
என் முந்தைய படங்களைவிட இந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. உதயநிதி, கண்ணாடி அணிந்து நடிக்க நிறையவே கஷ்டப்பட்டார். சுவர்களில் முட்டிக் கொண்டார், பார்வையற்ற நபராக அவர் நடிப்பது குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பினாலும் அதை பொருட்படுத்தாமல் உதயநிதி நடித்து காண்பித்துள்ளார்' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பாடலாசிரியர் கபிலன், 'மேடையில் இரண்டு நிமிடம்தான் பேச வேண்டும் என்று உதயநிதி கூறிவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் நான் எழுதிய 2 பாடல்களைப் பற்றி இரண்டு் மணிநேரம் பேசலாம். மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி' படம் முதலே அவர் படங்களில் பாடல்களை நான் எழுதிவருகிறேன். இலக்கியவாதியாகவும், பன்முகக் கலைஞனாகவும் இருப்பவர் மிஷ்கின்' என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 'மிஷ்கின் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார்' - நித்யா மேனன்