தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து மருத்துவரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
போதிய அளவு தடுப்பூசி கைவசம் உள்ளது என்று அரசு கூறினாலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடச்சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இது தடுப்பூசி பற்றாக்குறையை உறுதி செய்கிறது.
இதனால் எளிய மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி விலை அதிகரித்துள்ளதால் எளிய மக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். அதனை பெறுவது அவர்களின் உரிமை. எனவே அரசு தடுப்பூசி பற்றாக்குறையை போக்கவும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய இயக்கம் தொடங்கிய சத்யராஜின் மகள்!