கரோனா வைரஸால் இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், சினிமா தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமாத்துறை மட்டுமில்லாமல் நாடகம், மேடை கலைஞர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "கரோனா பாதிக்கப்பட்ட இந்த நாள்கள் நாடகம், மேடை கலைஞர்களுக்கு சோதனையான காலகட்டம். ஏற்கனவே நாடகம், மேடை கலைஞர்கள் தொழில் நலிவடைந்து உள்ளது. இதில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதால், அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மிகவும் கவனத்தோடு செய்து வருகிறது. அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சினிமா தொழிலாளர்கள் நாடகம், மேடை கலைஞர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு நிதி உதவி செய்து பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’மது பழக்கத்தை கைவிடுங்கள்’: பார்த்திபன் வேண்டுகோள்