திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019,2020 இரண்டு ஆண்டுகள் கரோனா பரவல் காரணமாக விருது விழா நடைபெறமால் இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன் சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டி. இமானும், திரைப்படத்திற்கா சிறந்த ஜூரி விருதை 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்காக பார்த்திபனும், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை நாகவிஷாலும் பெறவுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது முன்னதாக பாடகி லதா மங்கேஷ்கர், இயக்குநர் சத்யஜித் ரே, நடிகர் சிவாஜி, இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.