நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. ஆனால், அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய கடைசி ட்விட்டர் பதிவுக்குப் பிறகு, ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கும் முதலமைச்சர் வேட்பாளரை நான் ஆதரிப்பேனா? என்ற கேள்வியை பலரும் கேட்டனர். அந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால்,முதலமைச்சர் வேட்பாளராக ரஜினி இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
லீலா மாளிகையில் தலைவர் முடிவை வெளிப்படையாக அறிவித்த போது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுகுறித்து, நான் தலைவரிடம் கடந்த வாரம் பேசிய போது கூட, முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் ஆதரவு தருவேன், மற்றவர்களுக்கு கிடையாது.
முதலமைச்சர் வேட்பாளராகக் களத்தில் தலைவர் இறங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நீங்க வந்தா நாங்க வறோம் , இப்ப இல்லனா வேற எப்போ. நவம்பர்? ” என்று குறிப்பிட்டுள்ளார்.