சென்னை: வில்லன், ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை என அனைத்து வகை கதாபாத்திரங்களிலும் கலக்கிவரும் பசுபதி மாஸான இரண்டு கேரக்டர்களில் நடிக்க மறுத்ததன் பின்னணி தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான 'அசுரன்' படத்தில் முருகேசன் என்ற கேரக்டரில் மஞ்சு வாரியரின் சகோதரராக தோன்றி நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் நடிகர் பசுபதி. தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறும் பசுபதி இரண்டு கிளாசிக் திரைப்படங்களில் நடிக்க மறுத்தது பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'எனது சினிமா வாழ்க்கையில் இரண்டு முக்கிய படங்களில் மிஸ் செய்தேன். பொல்லாதவன் படத்தில் கிஷோர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னைதான் முதலில் அணுகினார்கள். ஏற்கனவே தனுஷுடன் இணைந்து 'சுள்ளான்' படத்தில் அதேபோன்றதொரு கேரக்டரில் நடித்திருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தேன். ஆனால் படத்தின் ரிலீசுக்கு பிறகு வெற்றிமாறனிடம் வருத்தம் தெரிவித்தேன்.
இதேபோல் தியாகராஜன் குமாரராஜா தனது முதல் படமான 'ஆரண்ய காண்டம்' படத்தின் கதையை என்னிடம் முதலில் கூறியபோது புரியவில்லை. பின்னர்தான் சம்பத் நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைக்க திட்டமிட்டது தெரியவந்தது' என்றார்.
'பொல்லாதவன்' படத்தில் செல்வம் என்ற கேரக்டரில் மிரட்டிய கிஷோரின் கதாபாத்திரம், ஆரண்ய காண்டம் படத்தில் பசுபதியாக தோன்றிய சம்பத் கேரக்டர் ஆகியவை அந்தந்த படங்களில் மிகப்பெரிய ட்விஸ்டை தந்தது. அத்துடன், அந்த இரண்டு படங்கள் தமிழில் வெளியான பெஸ்ட் கிளாசிக் படங்களாக மாறுவதற்கும் இந்த கதாபாத்திரங்களும் முக்கிய காரணமாகத் திகழ்கிறது.
இதனிடையே மிக நீண்ட நாட்களாக ஒன்றாக பணியாற்ற விரும்பிய வெற்றிமாறன் - பசுபதி ஆகியோர் தற்போது 'அசுரன்' படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்துள்ளனர்.