தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு வாக்களிக்கவரும் நடிகர், நடிகைகள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். பாண்டவர் அணியின் சார்பில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நிற்கும் நாசர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 'நாங்கள் எப்படியாவது தேர்தலை நடத்த முயன்றோம்; ஆனால் எதிரணி அதை தடுக்க முயன்றது. எங்கள் நிர்வாகம் மீது எந்தத் தவறும் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக தெரியாத தவறு இப்போது எப்படி தெரிந்தது எங்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டவர்கள்; ஏன் எதிராக நிற்கிறார்கள் என்று தெரியவில்லை.
ரஜினிக்கு அஞ்சல் வாக்கு காலம் தாழ்ந்து சென்றதற்கு வருத்தப்படுகிறேன்' என அவர் தெரிவித்தார்.
இதன்பின்னர் பேசிய நடிகர் பொன்வண்ணன், கடந்த தேர்தலின்போது குறுகிய காலம் இருந்த காரணத்தால் அஞ்சல் வாக்கு தாமதமாக சென்றது. அஞ்சல் வாக்குகளுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர் கூறினார்.
மேலும், இயக்குநர் சுந்தர். சி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், பாண்டவர் அணி வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கம். சங்க உறுப்பினராக எனது வாக்கை பதிவுசெய்தேன் என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா, வாக்குகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஆனால் வாக்கு செலுத்ததான் யாரும் வரவில்லை எனக் கூறினார்.