தமிழ்த் திரையுலகில் 80களில் மிகவும் பிரபலமாக இருந்த கதாநாயகர்களில் ஒருவர் மோகன். இவரது படங்களில் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாடியுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவருடனான நினைவுகள் குறித்து நடிகர் மோகன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, "திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பியின் ரசிகன். பெங்களூருவிலிருந்த காலகட்டங்களில் அவரின் குரலும், பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்திற்கு எஸ்.பி.பிதான் இசையமைப்பாளர்.
தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ, எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ , ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ பாடல்கள் என பல படங்களில் இவர் பாடியிருக்கிறார். தொழில்முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன்.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பியின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. அவர் பூரண குணமடைந்து, இல்லம் திரும்ப வேண்டும் என்று அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.