நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இத்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அண்மையில், இதற்கு ஆதரவு தெரிவித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேரில் சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மக்கள் பாதை இயக்கத்தினரை சந்தித்து நீட் தேர்வுக்கு எதிரான குரலைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமி மக்கள் பாதை இயக்கத்தினரை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "நீட் தேர்வால் மாணவர்கள் உயிர்போவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். ஆறு இளைஞர்கள் ஆறு நாள்களாக உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
உதவி செய்யாமல் இருந்தாலும், உபத்தரம் செய்யாமல் இரு என்ற பழமொழி உள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்திற்கு எந்தவித கேள்விகளைக் கேட்காமல் மாநில அரசு கையெழுத்திட்டுவருகிறது.
ஒரு சட்டம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; மக்களைத் துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது என்று காமராஜர் தெரிவித்துள்ளார். இங்கு ஆளும் அரசு அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசித்துவருகின்றது. மக்களை பற்றி யாரும் யோசிக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான மசோதா தாக்கல். அது அடிப்படையிலே புரிதல் உள்ளது. இனி நாம் இந்தியன் என்று சொல்வதைவிட தென் இந்தியன் என்று சொல்லிவிடலாம்" என்றார்.
இதையும் படிங்க: ‘நீட் தேர்வை கண்டித்து பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்’- நாராயணசாமி வேண்டுகோள்!