சென்னை: மனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்றும் என்னை உற்சாகமாக்கி வருகிறது என்று நடிகர் மன்சூரலிகான் கூறினார்.
வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், கதாநாயகன், நகைச்சுவை கலந்த வில்லத்தனம், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் என வித்தியாசமாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு தவிர சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டிவரும் இவர், சமீப காலமாக போராட்டம், வழக்கு, ஜெயில், தேர்தல் பரப்புரை என்று பரபரப்பாகவும் இருந்துவருகிறார். இதையடுத்து படப்பிடிப்புத் தளத்தில் பிஸியாக இருந்த அவர் சிறிய பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்துவருகிறேன்.
கெளதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், நடிகை ரெஜினா நடிக்கும் படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்துவருகிறேன்.
மனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்றும்தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.