ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரும் பாடகருமான கோட்டா சீனிவாச ராவ், குணச்சித்திர வேடத்திலும் வில்லனாகவும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 1999-2004 வரை ஆந்திராவின் விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பெருமாள் பிச்சை
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் 'பெருமாள் பிச்சை'யாக கோட்டா சீனிவாச ராவை இயக்குநர் ஹரி அறிமுகப்படுத்தினார். அதன்பின் விஜய்யின் 'திருப்பாச்சி' படத்தில் 'சனியன் சகட' என்ற காதபாத்திரத்தில் நடித்த அவர், தொடர்ந்து தனது மிரட்டலான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். நடிகர் கரணுடன் ’கொக்கி’ படத்தில் இவர் ஏற்று நடித்த வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
கவுண்டமணிக்கு டப்பிங்
இப்படி தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி வந்த கோட்டா சீனிவாச ராவ், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வாளர். தமிழில் வெளியான 'ஜென்டில் மேன்' படத்தின் தெலுங்கு டப்பிங்கில், கவுண்டமணிக்கு கோட்டா சீனிவாச ராவ்தான் டப்பிங் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ’பத்மஸ்ரீ’ விருது கோட்டா சீனிவாச ராவுக்கு 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இப்படி திரைத்துறையில் பன்முகத் திறமையாளராக வலம் வந்த கோட்டா சீனிவாச ராவ், தற்போது தன்னைத் தேடி வரும் படங்களை எல்லாம் தவிர்த்து வருகிறார்.
மகன் இழப்பால் மீளாத் துயர்!
இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கோட்டா சீனிவாச ராவிடம் கேட்டபோது, இருசக்கர வாகனத்தில் உயிரிழந்த தனது மகனின் இழப்பைத் தாங்க முடியாமலும் அதிலிருந்து இன்னும் மீளமுடியாமலும் தவித்து வருவதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்வில் தனது குடும்பத்தையும் சக மனிதர்களையும் அதிகமாக நேசிக்கும் மனிதாக இருக்கும் கோட்டா சீனிவாச ராவ், தனது மகனின் இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வந்து, பல படங்களில் நடிக்க வேண்டுமென, அவரது பிறந்தநாளான இன்று (ஜூலை.10) ஈடிவி பாரத் வாழ்த்துகிறது.
இதையும் படிங்க: 'விக்ரம்' கமலுக்கு வில்லானகும் ஃபகத் பாசில்!